வேங்கைவயல் வழக்கு; மேலும் 5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை
|வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 26 நபர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த 6 பேரில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்பட்ட நிலையில், மற்ற 5 பேருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த டி.என்.ஏ. மாதிரிகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளன.