வேங்கைவயல் விவகாரம்: 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு
|வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த டி.என்.ஏ. சோதனை வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கும், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கீழமுத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.