வேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
|குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். கலெக்டருக்கு நோட்டீசு இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர்தொட்டியை அசுத்தம் செய்த நபர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?, வழக்கின் விசாரணை தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசை அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது.