< Back
மாநில செய்திகள்
மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை

தினத்தந்தி
|
6 May 2023 3:05 PM IST

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று பங்காரு அடிகளார் தலைமையில் 1008 யாக குண்டங்கள் அமைத்து வேள்வி பூஜை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ய வேண்டும். மக்கள் மன அமைதி பெறவும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற வேண்டியும் இந்த வேள்வி பூஜை நடைபெற்றது.

இந்த வேள்வி பூஜை கடந்த மாதம் 26-ந் தேதி குருபூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். மதியம் நடைபெற்ற அன்னதானத்தை ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை 5 மணி அளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி அருள்மொழி, ஓய்வுபெற்ற ெரயில்வே அதிகாரி ஜெயந்த், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைெயாட்டி பங்காரு அடிகளாரின் 83-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 83 எண் வடிவில் சக்கரம் அமைத்து அதில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கருவறை முன்பாக பஞ்சபூத சக்கரம் அமைத்து ஐந்து தலை நாகம் படம் எடுக்க அதனுள் கலசம் நிறுவப்பட்டு ஐந்து யாக குண்டங்களும் என விதவிதமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டு வேள்வி பூஜை செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தஞ்சை மாவட்ட தலைவர் வாசன், இணை செயலாளர் ராஜேந்திரன் உள்பட தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்