< Back
மாநில செய்திகள்
தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - சீமான்
மாநில செய்திகள்

தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
14 Oct 2022 4:24 PM IST

மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்து, அவர்களுக்கு உடனடியாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் படப்பை பகுதியில் வசித்துவந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் வேல்முருகன் தன்னுடைய இருபிள்ளைகளின் கல்விக்காகச் சாதி சான்றிதழ் கேட்டுப் போராடி வந்த நிலையில், சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துத் தவிக்கும் அவரது இரு குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மலைப்பகுதியில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பால் தங்கள் வாழ்விடங்களிலிருந்து நாடோடிகளாக விரட்டப்பட்ட மக்கள் மலைக்குறவர்கள். சமூக அடுக்கில் ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ள பழங்குடியின மக்களாகிய மலைக்குறவர்கள், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகிய கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டினைப் பெறுவதற்கு ஆதாரமாக விளங்குவது சாதி சான்றிதழே ஆகும். ஆனால், தமிழ்ப் பழங்குடியினரான மலைக்குறவர் மக்களை வட மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த அக்கிபிக்கி, நக்கலே உள்ளிட்டவர்களோடு தவறாகச் சேர்த்து பட்டியலினத்தவராக தமிழ்நாடு அரசு அறிவித்தது வரலாற்றுப் பெரும்பிழையாகும்.

அரசு தங்களைப் பட்டியலினத்தவர் என்று வகைப்படுத்துவதை மாற்றி, பழங்குடியினர் என்று அறிவிக்க வேண்டுமென்று நீண்ட காலமாக குறவர்குடி மக்கள் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின் நீட்சியாகவே சகோதரர் வேல்முருகனின் உயிர் அநியாயமாகப் பறிபோன கொடுமையும் அரங்கேறியுள்ளது. ஆனால், அதற்குப் பிறகும் தமிழ்நாடு அரசு சகோதரர் வேல்முருகன் மரண வழக்கின் விசாரணையின்போது தொல்குடி தமிழர்களான குறவர்குடி மக்களைப் பழங்குடியினராக ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொல்குடி தமிழ்மக்கள் உயிரைவிட்டாலும் உரிமைபெற முடியாது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும். இதுதான் 55 ஆண்டுகாலமாக திராவிடம் இந்த மண்ணில் வளர்த்த சமூகநீதியா? பல ஆண்டுகளாகப் போராடியும் குரலற்ற குறவர்குடி மக்களுக்கு அவர்களின் உரிமையான, உண்மையான சாதி சான்றிதழைக்கூடத் தரமறுத்துவிட்டுச் சமத்துவம், சமூக நீதி என்று திராவிடக் கட்சிகள் பேசுவது வெட்கக்கேடானது. சகோதரர் வேல்முருகனின் மனதில் எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் மீது விரக்தியும், அரசின் மீது நம்பிக்கையின்மையும் ஏற்பட்டிருந்தால் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார் என்று எண்ணும்போது மிகுந்த மனவேதனை உண்டாகிறது. இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

முதலமைச்சர் பழங்குடியினர் ஒருவரின் வீட்டிற்கு நேரில் செல்வது, அங்கே உணவு உண்பது என செய்தி அரசியல் செய்து, அதன் மூலம் ஒட்டுமொத்த பழங்குடியினர் பிரச்சனையும் தீர்க்கப்பட்டுவிட்டதுபோல விளம்பரம் தேடிய திமுக அரசின் ஏமாற்று நாடகம், பின்னாட்களில் முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று அம்மக்களே வேதனையுடன் கூறியபோது வெளிச்சத்திற்கு வந்தன. ஒருவேளை சகோதரர் வேல்முருகன் பற்றியும் முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டிருந்தால் விளம்பரத்திற்காகவாவது முதலமைச்சரே அவரின் வீட்டிற்கு சென்று சாதி சான்றிதழ் கொடுப்பதாக உறுதியளித்திருப்பார். அப்படியான வாய்ப்பும் இல்லாத நிலையில் இன்றைக்கு அநியாயமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உயர்நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி, 'தொல்தமிழர்களான குறவர்குடி மக்கள் பழங்குடியினரே!' என்ற வரலாற்றுப் பேருண்மையை ஏற்பதாக அறிவிப்பதோடு, அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து புதிய அரசாணையும் வெளியிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்க்குறவர்குடி மக்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் விரைந்து பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். உயிரிழந்த சகோதரர் வேல்முருகன் அவர்களின் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதோடு, அவரது இரு பிள்ளைகளின் முழுமையான கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டுமெனவும், துயர் துடைப்பு நிதியாக 50 இலட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்