விழுப்புரம்
வேலூர் வாலிபரிடம் ரூ 7 லட்சம் மோசடி
|இந்திய ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி வேலூர் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்
விழுப்புரம்
வேலை வாங்கித்தருவதாக
வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு மகன் அஜித்குமார் (வயது 23). இவர் தனது உறவினர் ஹரிகரன் மூலம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்த வசந்தகுமார் (51) என்பவருக்கு அறிமுகமானார். இவர் சொக்கனந்தல் சாலையில் ராணுவ பயிற்சி மையம் நடத்தினார்.
அப்போது அவர், தான் ராணுவத்தில் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு தற்போது ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருவதாகவும், தனக்கு அரசியல் செல்வாக்கு மூலம் இந்திய ரெயில்வேயில் அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.7 லட்சம் செலவாகும் என்றும் கூறினார். இதை நம்பிய அஜித்குமார், வசந்தகுமார் கூறியவாறு அவரது வங்கி கணக்கிற்கு 16.2.2019 அன்று ரூ.3 லட்சத்தை செலுத்தியதோடு, 15.5.2019 அன்று ரூ.4 லட்சத்தை நேரில் சென்று கொடுத்துள்ளார்.
ரூ.7 லட்சம் மோசடி
அதன் பிறகு ஒரு வருடமாகியும் அஜித்குமாருக்கு வேலை வாங்கித்தராததால் அவர், வசந்தகுமாரிடம் சென்று பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு 27.1.2022 தேதியிட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அஜித்குமாருக்கு வசந்தகுமார் கொடுத்தார். அதோடு அந்த காசோலையை வங்கியில் செலுத்த வேண்டாம், பணத்தை விரைவில் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதுநாள் வரையிலும் அரசு வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தராமல் வசந்தகுமார் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
இதுபற்றி அஜித்குமார், 31.5.2022 அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார். அதன் பின்னர் வசந்தகுமார், ரூ.2 லட்சம், ரூ.1,50,000, ரூ.3 லட்சம் என 3 காசோலைகளை அஜித்குமாருக்கு கொடுத்துள்ளார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. பின்னர் கடந்த 9-ந் தேதியன்று சத்தியமங்கலம் பகுதியில் உள்ள வசந்தகுமாரின் வீட்டிற்கு சென்று அஜித்குமார் பணத்தை கேட்டார். அதற்கு வசந்தகுமார், பணத்தை தர முடியாது என்று கூறியதோடு அஜித்குமாரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
முன்னாள் ராணுவ வீரர் கைது
இதுகுறித்து அஜித்குமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு இருதயராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று வசந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.