வேலூர்: திடக்கழிவு மேலாண்மை மையத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
|வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் ஏற்பட்ட தீயை ஒருமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
வேலூர்,
வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டிகள் இல்லாத மாநகராட்சி ஆகும். இங்குள்ள வீடு, வீடாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்கள். அந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன. இதற்காக வேலூர் மாநகராட்சி பகுதியில் 55 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை-பெங்களூரு அணுகுசாலையோரம் அமைக்கப்பட்டிருந்த 5 திடக்கழிவு மேலாண்மை மையங்களில் குப்பைகள் தரம் பிரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு திடக்கழிவு மேலாண்மை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு உடனடியாக தீயணைப்பு நிலையம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து குப்பைகளும் எரிந்து போயின.
இதற்கிடையே இந்த தீ விபத்து குறித்து சுகாதார மேற்பார்வையாளர் ராஜன்பாபு வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதில், திடக்கழிவு மேலாண்மை மையத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.