வேலூர் ஹிஜாப் விவகாரம்: விசாரணை நடைபெற்று வருகிறது - மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் விளக்கம்
|வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேலூர் கோட்டையில், ஹிஜாப் அணிந்த சில பெண்கள் தங்கள் நண்பர்களுடன் சென்றுள்ளனர். அப்போது சில நபர்கள் அந்த பெண்களை வழிமறித்து ஹிஜாப்பை கழற்றுமாறு வற்புறுத்தியதோடு, அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை அந்த நபர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி வந்து செல்வதாகவும் அவர் கூறினார்.