கோயம்புத்தூர்
சேறும், சகதியுமான சாலையில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
|ஆனைமலை-வெப்பரை இடையே சேறும், சகதியுமான சாலையில் வாகனங்கள் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆனைமலை
ஆனைமலை-வெப்பரை இடையே சேறும், சகதியுமான சாலையில் வாகனங்கள் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சேறும், சகதியுமான சாலை
ஆனைமலையில் இருந்து வெப்பரை செல்லும் சாலையானது சுள்ளிமேட்டுப்பதி, எம்.ஜி.ஆர். நகர், காக்காகொத்திபாறை, கே.பி.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
இந்த பகுதிகளை சுற்றிலும் விளைநிலங்கள், தென்னைநார் தொழிற்சாலைகள், ஆழியாற்றங்கரை உள்ளதால், தினமும்ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்தநிலையில் ஆனைமலை-வெப்பரை சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் குண்டும், குழியுமாக கிடக்கிறது. அந்த சாலை மிகவும் பழுதடைந்து மண்சாலை போன்று காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
வலுக்கி விழுந்து...
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை சீரமைக்கப்பட்டபோது, 11 பி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் சாலை மோசமானதால், அந்த பஸ் இயக்கப்படுவது இல்லை. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் கூட விரைவாக வந்து செல்ல முடியவில்லை. அவை நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வலுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.
நடவடிக்கை
இந்த சாலையை சீரமைக்கக்கோரி பேரூராட்சியிடம் தெரிவித்தால், ஒன்றியத்துக்கு உட்பட்டது என்கிறார்கள். அவர்களிடம் கேட்டால், பொதுப்பணித்துறைக்கு உட்பட்டது என்கிறார்கள். சாலையின் இருபுறமும் முட்புதர்கள் படர்ந்து உள்ளதோடு தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இந்த பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.