< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்-மதுரை சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல்-மதுரை சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

தினத்தந்தி
|
21 Aug 2023 1:15 AM IST

அ.தி.மு.க. மாநாடு, திருமண முகூர்த்த நாள் எதிரொலியாக திண்டுக்கல்லில், மதுரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

அ.தி.மு.க. மாநாடு

அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரைக்கு கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர்.

குறிப்பாக ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க.வினர் ஏராளமான வாகனங்களில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சென்றனர்.

இதேபோல் நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால் திண்டுக்கல் பகுதியில் ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதில் பங்கேற்பதற்காகவும் ஏராளமானோர் திண்டுக்கல்லுக்கு வாகனங்களில் வந்தனர். இதனால் திண்டுக்கல் நகரவாசிகள் பயன்படுத்தும் வாகனங்களை தவிர்த்து வெளியூர் வாகனங்களும் திண்டுக்கல்லின் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்தன.

போக்குவரத்து நெரிசல்

இதனால் புறநகர் சாலைகளான பழனி பைபாஸ் சாலை, வத்தலக்குண்டு பைபாஸ் சாலை, மதுரை சாலை, அஞ்சலி ரவுண்டான சாலை ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த வாகனங்கள், திண்டுக்கல்லை கடந்து செல்லவே ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர். நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் விடப்பட்டதாலேயே புறநகர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே புறநகர் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைரோடு சுங்கச்சாவடி

இதேபோல் கொடைரோட்டில், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அ.தி.மு.க. மாநாட்டுக்கு வாகனங்கள் செல்வதற்கு வசதியாக சுங்கச்சாடிவயில் 2 வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து வழித்தடங்களில் வாகனங்கள் கடந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுங்கசாவடி ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.

Related Tags :
மேலும் செய்திகள்