< Back
மாநில செய்திகள்
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்

தினத்தந்தி
|
27 Jun 2023 5:54 PM IST

பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் வாகனங்கள் துருப்பிடித்து வீணாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவில் உள்ள திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், மற்றும் திருத்தணி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட எல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்கள், திருட்டு, மோசடி, கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் என பல்வேறு வகையான குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு போலீஸ் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுபோல, விபத்துகளில் சிக்கும் வாகனங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடைபெறும். வழக்குகள் கோர்ட்டு கட்டுப்பாட்டுக்குள் வருவதால், விசாரணை முடிந்த பின்னரே உரியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படும்.

ஆனால் சில வாகனங்கள் உரிமையாளர்களால் கோரப் படாமல் அப்படியே கிடக்கிறது. பல மாதங்களாக இந்த வாகனங்கள் அப்படியே நிறுத்தப்படுவதால், மாறி மாறி வெயில், மழைக்காலங்களை எதிர்கொண்டு, துருப்பிடித்து மெல்ல சிதிலமடைந்து எலும்புக்கூடாக மாறி வீணாகுகிறது. எனவே உரிமைக் கோராத வாகனங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொது ஏலத்திற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்