< Back
தமிழக செய்திகள்
வாகன சோதனை- 30 ஆட்டோக்கள் பறிமுதல்; 318 வழக்குகள் பதிவு- அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உருண்ட டிரைவரால் பரபரப்பு
மதுரை
தமிழக செய்திகள்

வாகன சோதனை- 30 ஆட்டோக்கள் பறிமுதல்; 318 வழக்குகள் பதிவு- அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உருண்ட டிரைவரால் பரபரப்பு

தினத்தந்தி
|
29 Nov 2022 2:14 AM IST

மதுரை நகரில் விதிகளை மீறிய நடத்திய திடீர் சோதனையில் 30 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


மதுரை நகரில் விதிகளை மீறிய நடத்திய திடீர் சோதனையில் 30 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விதிமீறல்

மதுரை நகரில் சில ஆட்டோக்களில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டும், ஆட்டோவில் மீட்டர் இல்லாமல் ஓட்டுவது உள்பட பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் நகரில் அவ்வாறு இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன் பேரில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகச்சாமி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் திருமலைக்குமார் தலைமையில். உதவி கமிஷனர்கள் செல்வின், மாரியப்பன், வட்டார போக்குவரத்து அதிகாரி சித்ரா மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ரமேஷ்குமார், சுரேஷ், கார்த்தி, தங்கமணி உள்ளிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலக நாதன், முரளி, சக்திவேல், அனிதா, செல்வம், ஜாஸ்மின் கமலா நேற்று நகரில் பல்வேறு இடங்களில் திடீரென்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

30 ஆட்டோக்கள் பறிமுதல்

அதில் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் நிலைய பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நடத்திய சோதனையின் போது பெர்மிட் மற்றும் எப்.சி. சான்று இல்லாத 30 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் நகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய சோதனையில் மீட்டர் இல்லாத ஆட்டோக்கள், இருக்கைகளை மாற்றி அமைத்தல், அதிக ஆட்கள் ஏற்றி சென்றது, சீருடை அணியாமல் சென்றது, அதிவேகமாக ஓட்டி சென்றது என 318 ஆட்டோக்கள் மீது மொத்தம் 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மதுரையில் நேற்று ஒரே நேரத்தில் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

டிரைவரால் பரபரப்பு

இந்த நிலையில் முனிச்சாலை பகுதியில் வந்த ஆட்டோவை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த ஆட்டோவில் விதிமீறல் இருந்ததாக போக்குவரத்து போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஆட்டோ டிரைவர் சாலையில் படுத்து உருண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததும், பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் கோரிப்பாளையம் பகுதியில் தலைகவசம் அணியாமல் சென்ற போலீஸ்காரர் ஒருவருக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்