திண்டுக்கல்
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வாகன சோதனை
|பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதனால் கொடைக்கானல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே காட்டுத்தீ பற்றி எரிகிறது. இது ஒருபுறம் இருக்க, மனிதர்களாலும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு தங்களது தோட்ட பகுதியில் காய்ந்த புல், செடிகளுக்கு மலைக்கிராம மக்கள் தீ வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்களை சுற்றுலா பயணிகள் கொண்டு செல்கிறார்களா? என்று வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள தேக்கந்தோட்டம் சோதனைச்சாவடியில், கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனையின்போது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வாகனங்களில் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனச்சரகர் பழனிக்குமார் கூறும்போது, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது காட்டுத்தீ பரவி வருவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.