காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் வாகனம் மோதி விபத்து; லாரி டிரைவர் பலி
|காஞ்சீபுரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் லாரி டிரைவர் பலியானார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 25). கன்டெய்னர் லாரி டிரைவரான இவர், காஞ்சீபுரம் அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் இருந்து லோடு ஏற்றி கொண்டு வேலூர் மார்க்கமாக கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்று கொண்டு இருந்தார். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அருகே வெள்ளை கேட் பகுதியில் சென்ற போது, லாரியில் பொருத்தப்பட்டிருந்த கன்டெய்னரின் பெல்ட் பழுதடைந்தது. இதனால் லாரியை நிறுத்திய கதிர்வேல் கீழே இறங்கி சரிசெய்து கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. அப்போது பலத்த காயமடைந்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த கதிர்வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமானவரை தேடி வருகின்றனர்.