கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களை கட்டியது
|கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்க காலை முதலே பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் குவிந்தனர்.
சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் ஆண்டுதோறும் பொதுமக்களின் வசதிக்காக பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்படும். இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு சந்தை கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகியவை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளில் 60 லாரிகளில் மட்டுமே கரும்புகள் வந்தது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் கரும்பு, மஞ்சள், இஞ்சி ஆகியவை அதிகளவில் குவிய தொடங்கியது.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களைகட்டியது. கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்க காலை முதலே பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் குவிந்தனர். பொங்கல் சிறப்பு சந்தை குறித்து வணிக வளாகத்திற்கு வரும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கிய முதல் நாளான 11-ந்தேதி 60 லாரிகளில் மட்டுமே கரும்புகள் வந்தது. அன்றைய தினம் ரூ.500 முதல் ரூ.600 வரையில் கரும்பு கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நேற்று 130 லாரிகளில் கரும்பு கட்டுகள் விற்பனைக்கு வந்தது. இதனால், விற்பனை விலை குறைந்து 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.500-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, மஞ்சள் கொத்து ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், இஞ்சி கொத்து ரூ.100 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று, சென்னை மட்டுமில்லாமல் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து வாங்கி சென்றனர். குறிப்பாக சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல், மஞ்சள் கொத்துகள் ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் விற்பனைக்காக குவிந்துள்ளது. 80 லாரிகள் வரையில் நேற்று மஞ்சள் கொத்துகள் விற்பனைக்காக வந்துள்ளது. இதனால், கோயம்பேடு பொங்கல் சந்தையில் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதேபோல், வீட்டில் கட்டப்படும் பொங்கல் தோரணம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.30, பிடிகருணை கிழங்கு ரூ.40, சிறு கிழங்கு ரூ.80, மொச்சை ரூ.60, வெற்றிலை வள்ளிக்கிழங்கு ரூ.60, பட்டாணி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோக, வாழை இலை, அரிசி, வெல்லம், நெய், பூக்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் அதிகளவில் சிறுவியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, இன்று (ஞாயிறுக்கிழமை) விடுமுறை என்பதால் அதிகளவில் பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் சிறப்பு சந்தையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.