திருப்பூர்
சாக்கடையில் வளரும் கீரைகள் விற்பனைக்கு வரும் அவலம்
|மடத்துக்குளம் பகுதியில் சாக்கடையில் முளைத்துள்ள கீரைகளை சேகரித்து விற்பனைக்கு கொண்டு வரும் அவலம் அரங்கேறி வருகிறது.
கீரை கிராமம்
'கீரை வாங்கலையோ...அம்மா கீரை வாங்கலையோ... அரைக்கீரை.. சிறுகீரை... பொன்னாங்கண்ணிக்கீரை' என்ற குரலுடன் வீதிகளில் வரும் கீரைக்காரம்மாக்கள் கண்ணில் படுவதில்லை. பெரும்பாலும் உழவர் சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும் பொருளாக கீரை மாறிவிட்டது. ஆனாலும் மடத்துக்குளத்தையடுத்த கிளுவங்காட்டூர் கிராமம் 'கீரை கிராமம்' என்று அழைக்கப்படுமளவுக்கு அங்கு கீரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
அங்கு விளைவிக்கப்படும் கீரைகள் பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அன்றன்று பறிக்கப்படும் கீரைகள் உடுமலை உழவர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல வியாபாரிகள் இங்கு கீரைகளை வாங்கி இருசக்கர வாகனங்கள் மூலம் வீதிகளில் விற்பனை செய்கின்றனர். பலவிதமான சத்துக்கள் நிறைந்தது என்ற வகையில் கீரையை பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் கீரை உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நோய் பாதிப்பு
இந்தநிலையில் பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒருசில நேர்மையற்ற வியாபாரிகள் செயல்பட்டு வருவது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. அந்தவகையில் மடத்துக்குளம் பகுதியில் ஒருசில இடங்களில் சாக்கடைக் கால்வாய்களில் புதர்ச் செடிகளோடு சேர்ந்து பொன்னாங்கண்ணி உள்ளிட்ட கீரைகள் முளைத்துள்ளன. அதுதவிர ெரயில் தண்டவாளத்தை ஒட்டிய, திறந்த வெளிக்கழிப்பிடமாக சிலர் பயன்படுத்தி வரும் இடங்களிலும் கீரைகள் முளைத்துள்ளன.
இந்த கீரைகளை ஒருசில நபர்கள் சேகரித்து கட்டுகளாகக் கட்டி வீதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த கீரைகளில் கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் நோய் பரப்பும் கிருமிகள் மறைந்திருக்கக்கூடும். இதனால் அவற்றை சாப்பிடும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆர்வத்தில் காசு கொடுத்து கஷ்டத்தை வாங்கும் நிலை ஏற்படுகிறது.
நோய் அபாயம்
உடலில் சத்துக்கள் சேர்வதற்குப் பதிலாக நோய்கள் சேரும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் வீதிகளில் கீரைகள் வாங்கும் போது அவை எங்கேயிருந்து கொண்டு வரப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. முடிந்தவரை வழக்கமாக கீரைகள் கொண்டு வரும் நேர்மையான வியாபாரிகளிடம் வாங்குவதன் மூலம் இதுபோன்ற நபர்களைத் தவிர்க்கலாம்.