திருப்பூர்
காய்கறிகள் விலை எதிர்பார்த்த அளவு உயராததால் விவசாயிகள் ஏமாற்றம்
|ஓணம் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை எதிர்பார்த்த அளவு உயராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஓணம் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை எதிர்பார்த்த அளவு உயராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஓணம் பண்டிகை
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி, சின்ன வெங்காயம், பீட்ரூட், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் கேரள மாநிலத்துக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் போது காய்கறிகள் விலை அதிக அளவில் உயரும்.
ஆனால் இந்த ஆண்டில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள போதும் காய்கறிகள் விலை பெரிய அளவில் உயரவில்லை என்பது விவசாயிகளின் வேதனையாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
'கடந்த சில ஆண்டுகளாக வெள்ளம் பாதிப்பு, கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் கேரளாவில் ஓணம் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த தினங்கள் உள்ளது. எனவே காய்கறிகள் விலை பல மடங்கு உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இருந்தது.
மழை பாதிப்பு
சமீப காலங்களாக காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் தவித்து வரும் விவசாயிகளுக்கு இந்த பண்டிகைக் காலம் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காய்கறிகளின் விலை மிகச் சிறிதளவே உயர்ந்து கட்டுப்படியாகாத விலை தொடர்கிறது. குறிப்பாகதக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் ஏமாற்றமும் இழப்பும் தொடர்ந்து கொண்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் சாகுபடி செய்யப்பட்டதக்காளி செடிகள் பெருமளவு அழுகியுள்ளது. மேலும் அறுவடைக்குத் தயாராக இருந்த தக்காளிப் பழங்களும் பெருமளவு சேதமடைந்துள்ளன. பொதுவாக மழை பாதிப்பு ஏற்படும் சமயங்களில் வரத்து குறைவதால் விலை உயரும். ஆனால் தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 வரை மட்டுமே விற்பனையாகிறது. கடந்த வாரங்களில் ஒரு பெட்டி ரூ.100 -க்கும் குறைவாக விற்ற நிலையில், இந்த விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. இதுவும் கட்டுப்படியாகாத விலையே என்பது மட்டுமல்லாமல் மழையால் உற்பத்தியும் பெருமளவு குறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
விலை உயரும்
மழையால் அனைத்து விதமான காய்கறிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பச்சைமிளகாய் தவிர பச்சைக் காய்கறிகள் விலை பெரியஅளவில் உயரவில்லை. அடுத்து வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்' என்றனர்.