திருப்பூர்
பொரியல் தட்டை சாகுபடி பணிகள் தீவிரம்
|குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை சாகுபடி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை சாகுபடி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொரியல்தட்டை சாகுபடி
குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் கிணற்றுப்பாசனம் மூலம் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தட்டை பயறு, பீன்ஸ் வரிசையில் பொரியல் தட்டை உணவுப்பயிராகும். கேரள மாநிலத்தில் அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுவதால் குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டை கேரளா மாநிலத்திற்கு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பொரியல் தட்டை சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. பொரியல் தட்டை 60 நாட்களில் அறுவடைக்கு வரும் என்பதால் விவசாயிகள் பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டை உடுமலை, பொள்ளாச்சி பகுதி மட்டுமின்றி கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால் கூடுதல் விலை கிடைத்து வருகிறது.
கூடுதல் லாபம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும் அனைத்துப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோசன நிலை உள்ள பகுதிகளில் கூடுதல் மகசூல் கொடுக்கும். ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல் என ரூ.25 முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
பொரியல் தட்டை சாகுபடி செய்யப்பட்ட 50-வது நாளில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஏக்கருக்கு தினமும் 120 கிலோ வரை அறுவடை செய்யலாம். பொரியல் தட்டைக்கு சராசரியாக நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் தருவதாக உள்ளது என்றனர்.