திருப்பூர்
மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரம்
|மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கேரள வியாபாரிகள் வருகையால், நல்ல விலை கிடைப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கேரள வியாபாரிகள் வருகையால், நல்ல விலை கிடைப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை, வாழை, கரும்பு, நெல் மற்றும் காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை, கூலி தொழிலாளர்கள் தட்டுப்பாடு, மூலப்பொருட்கள் விலை ஏற்றம், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, பருவநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
எனவே சாகுபடி பயிர்களை தேர்வு செய்வதில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்கள். அந்தவகையில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். தென்னிந்தியப் பகுதிகளில், குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
கேரள உணவு
தமிழகத்தை விட கேரளாவில் அதிக பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தில் மரவள்ளிக் கிழங்கின் உற்பத்தித் திறன் அதிகமாக இருப்பதால், கேரளாவை விட அதிக அளவில் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது. ஆண்டுமுழுவதும் சாகுபடி செய்யக்கூடிய பயிரான மரவள்ளிக்கிழங்கு ரகத்தைப் பொறுத்து 8 முதல் 10 மாதங்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 18 முதல் 25 டன் மகசூல் தரக்கூடியது.
மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டி, தாந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாக மரவள்ளிக்கிழங்கு உள்ளது. தமிழகத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்குக்கு அங்கு கூடுதல் மவுசு உள்ளது. இதனால் கேரள மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறார்கள்.
அத்துடன் அவர்களே கூலி ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்து கொள்கின்றனர். தற்போது ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு தரத்தைப் பொறுத்து ரூ.12 முதல் ரூ.18 வரை கொள்முதல் செய்து வருகிறார்கள். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.