திருவாரூர்
திருவாரூரில், காய்கறிகள் விலை 'கிடு,கிடு' உயர்வு
|வெயிலால் காய்கறி விளைச்சல் பாதித்ததால் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் 1 கிலோ பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெயிலால் காய்கறி விளைச்சல் பாதித்ததால் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் 1 கிலோ பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி மார்க்கெட்
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக திருச்சி, கும்பகோணம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.மேலும் இங்கு மொத்த விற்பனையும், சில்லறை விற்பனையும் நடந்து வருகிறது.
தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. இதனால் திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தினமும் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. தொடர்ந்து 2 நாட்கள் முகூர்த்த நாட்கள் இருந்தது.
விலையும் உயர்ந்துள்ளது
இதனால் காய்கறிகளின் தேவை அதிகரித்து விலையும் கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. தினமும் வழக்கமாக வரும் காய்கறி அளவை விட குறைந்த அளவிலேயே திருவாரூர் கடைவீதியில் உள்ள கடைகளுக்கு காய்கறிகள் வந்தன. இதனால் கடந்த வாரம் 1 கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி 15 ரூபாய் உயர்ந்து ரூ.35-க்கு விற்பனையானது. இதேபோல் ரூ.70-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.100-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.110-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும், இஞ்சி ரூ.200-க்கும் விற்பனையானது. மற்ற காய்கறிகளை பொருத்தவரையில் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை அதிகரித்துள்ளது.
மேலும் உயர வாய்ப்பு
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கோடை காலம் ஆரம்பித்தாலும் காய்கறி விலையில் பெரிய அளவில் விலை உயரவில்லை. எலுமிச்சை, இஞ்சி, பச்சைப்பட்டாணி போன்றவற்றின் விலை மட்டும் உச்சத்தில் இருந்து வந்தது. தக்காளி, பல்லாரி ஆகியவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காய்கறி விலை கொஞ்சம், கொஞ்சமாக உயரத் தொடங்கி இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், காய்கறி விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைந்திருப்பதுதான் விலை உயர்வுக்கு காரணமாகும். வரத்து மேலும் குறையும் பட்சத்தில், காய்கறி விலை வரக்கூடிய நாட்களிலும் கிடு, கிடுவென உயர வாய்ப்பு உள்ளது' என்றனர்.