< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தினத்தந்தி
|
3 May 2023 2:52 PM IST

சித்திரை திருவிழாவையொட்டி திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 திவ்ய பிரதேசங்களில் ஒன்றாக திருவள்ளூர் வைத்திய ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் விளங்குகிறது. மூலவராக எவ்வுள்கிடந்தான் என பக்தர்களால் அழைக்கப்படும் வீரராகவ பெருமாள் விளங்குகிறார். திருமங்கைஆழ்வார், திருமழிசை ஆழ்வார்களால் பாடப்பெற்றது இந்த திருத்தலம். மூலவருக்கு சந்தன தைலத்தால் மட்டுமே அபிஷேகம் நடப்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் கோவில் குளத்தின் நீர் கங்கை நதிக்கு இணையான மகத்துவம் பெற்றது எனவும் கூறுகிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலை இருவேளைகளில் ரிஷப வாகனம், நாக வாகனம், சிம்ம வாகனம் உள்பட வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான நேற்று வீரராகவர் கோவிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேராட்ட பவனி நடைபெற்றது. திருத்தேரில் காலை 5 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு திருத்தேர் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டவாறு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் 4-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்