ராமநாதபுரம்
இந்த ஆண்டு முன்கூட்டியே பருத்தி விவசாயத்தை தொடங்கிய விவசாயிகள்
|ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் உள்ளிட்ட பல கிராமங்களில் மழையை எதிர்பார்த்து முன்கூட்டியே பருத்தி விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் உள்ளிட்ட பல கிராமங்களில் மழையை எதிர்பார்த்து முன்கூட்டியே பருத்தி விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
வானம்பார்த்த பூமி
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். மழையை எதிர்பார்த்து தான் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அது போல் முதுகுளத்தூர், சிக்கல், தேரிருவேலி, இதம்பாடல், ஏர்வாடி உள்ளிட்ட மாவட்டத்தில் அதிகமான ஊர்களில் பருத்தி விவசாயம் அதிகமாகவே நடைபெற்று வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக நெல் மற்றும் மிளகாய் விவசாயமும் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி விவசாயம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தான் தொடங்கப்படும்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள இதம்பாடல், சிக்கல் உள்ளிட்ட ஒரு சில கிராமங்களில் விவசாயிகள் இந்த ஆண்டு முன்கூட்டியே பருத்தி விவசாயம் செய்ய தயாராகி அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி ஈடுபட்டு வருகின்றனர்.
பருத்தி விதை
விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் உழுது அந்த இடத்தில் பருத்தி விதைகளை தூவும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:- ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தான் பருத்தி விதை தூவுவோம்.
ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே புரட்டாசி மாதத்திலேயே பருத்தி விவசாயத்திற்காக பருத்தி விதைகளை விவசாய நிலங்களில் தூவி வருகிறோம். மழையை எதிர்பார்த்து தான் முன்கூட்டியே இந்த ஆண்டு பருத்தி விவசாயத்தை தொடங்குகிறோம்.
விளைச்சல்
அதுபோல் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரையிலும் பருத்தி விவசாயம் நன்றாகவே இருந்தது. ஒரு கிலோ பருத்தி 100-ல் இருந்து 120 வரையிலும் விலை போனது. இந்த ஆண்டும் பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மழையை எதிர்பார்த்து பருத்தி விதைகளை தூவி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.