காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடக்கம்
|காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது.
வைகாசி மாத வசந்தருது காலத்தில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாள் விழாவாக உற்சவர் வரதராஜ பெருமாள் திருமலையில் இருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி அங்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில் கோவில் சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் திரும்பி கோவில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் வைக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.
அந்த மண்டபத்தில் பக்தி உலாத்தல் நிகழ்வும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் மீண்டும் வசந்த மண்டபத்தில் இருந்து அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார்.
வசந்த உற்சவம் நடைபெறும் நாட்கள் முழுவதும் பெருமாள் தினந்தோறும் மாலையில் ஆஞ்சநேயர் சன்னதிக்கு சென்று பின்னர் மீண்டும் வசந்தமண்டபத்தில் எழுந்தருளும், நிகழ்வும் தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன.
உற்சவத்தின் நிறைவு நாளான இந்த மாதம் 24-ந்தேதி பெருமாள் திருக்கோவில் மாட வீதி புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் திருக்கோவில் வளாகத்தில் அத்திவரதர் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவத்துடன் வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.