திருநெல்வேலி
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்; துணை மேயர் தொடங்கி வைத்தார்
|நெல்லை டவுனில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார்.
நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பொது மருத்துவம், காசநோய், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், டெங்கு விழிப்புணர்வு, குழந்தைகள் நலம், மகளிர் நலம், மக்களை தேடி மருத்துவம், ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு தடுப்பூசி, நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல், ரத்த பரிசோதனை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகாசன பயிற்சியில் கலந்து கொண்டு துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கல்வி நிலைக்குழு தலைவர் பவுல்ராஜ் ஆகியோர் யோகாசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், சுகாதார அலுவலர் இளங்கோ, இளநிலை பொறியாளர் பட்டுராஜன், டாக்டர்கள் கீதா, சுப்புலட்சுமி, ராணி, அனிதா, நமச்சிவாயம் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.