< Back
மாநில செய்திகள்
வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு; தியேட்டர் கண்ணாடி உடைப்பு - கோவை, திருச்சியில் அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
மாநில செய்திகள்

வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு; தியேட்டர் கண்ணாடி உடைப்பு - கோவை, திருச்சியில் அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

தினத்தந்தி
|
12 Jan 2023 1:53 AM IST

சேலத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தியேட்டரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. கோவை, திருச்சியில் அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. சில தியேட்டர்களில் அதிகாலையிலேயே படங்கள் திரையிடப்பட்டன. இதனால் அந்த தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் நள்ளிரவு முதலே குவிந்தனர்.

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் வாரிசு, துணிவு ஆகிய 2 படமும் வெளியானதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை 2 படங்களும் தியேட்டர்களில் திரையிடப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு தியேட்டருக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கிருந்த தியேட்டர் கண்ணாடி உடைந்து நொறுங்கின. மேலும், 2 ரசிகர்கள் கேட்டின் மீது ஏறி கீழே குதித்ததால் அவர்களது காலில் கண்ணாடி துண்டுகள் குத்தியதில் காயம் அடைந்தனர். இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அந்த தியேட்டரில் அதிகாலை 1 மணிக்குதான் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் 11 மணிக்கு அந்த தியேட்டருக்குள் செல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பவுன்சர்கள், ரசிகர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் உள்ளே புகுந்த ரசிகர்கள் அங்கு போடப்பட்டு இருந்த கண்ணாடி கதவை உடைத்து திரையரங்குக்குள் நுழைந்தனர்.

இந்தநிலையில், போலீசார் விரைந்து வந்து ரசிகர்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் செல்லவில்லை. அத்துடன் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதன் காரணமாக ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் தவறி கீழே விழுந்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திருச்சி மெயின் கார்டு கேட் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திரையிடப்பட்டது. இதையொட்டி அங்கு திரண்ட ரசிகர்கள் சாலையில் சென்ற பஸ்களை தட்டியும், அங்கு வந்த வாகனங்கள் மீது ஏறி ஆட்டமிட்டப்படி கோஷமிட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்து ரகளை செய்தனர். இதில் ஒரு ரசிகர் உற்சாகத்தின் எல்லையை மீறி திரையரங்கு வாசல் கண்ணாடி முன்பு வான வெடியை தூக்கி வீசினார்.

இதனால் பொறுமை இழந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்