விழுப்புரம்
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
|கல்பட்டு நத்தமேடு கிராமத்தில் நடந்த வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் அருகே கல்பட்டு நத்தமேடு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிவடைந்ததை தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, லட்சுமி ஹோமம் பூர்ணாகுதி, தீபாராதனையும், நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கோ பூஜை, நவக்கிரக ஹோமம், மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, மூலமந்திரம், ஹோமம், மகா பூர்ணாகுதி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு 2-வது கால யாக பூஜை, காப்பு கட்டுதல், நாடி சந்தானமும், 8.30 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 9 மணியளவில் கடம் புறப்பாடாகி வரசித்தி விநாயகர் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கும், மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் கல்பட்டு நத்தமேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாமி வீதியுலா நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்பட்டு நத்தமேடு, புதூர், கோபாலபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.