காஞ்சிபுரம்
உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
|உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. மற்றும் தலையாரி கைது செய்யப்பட்டனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் பினாயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 55). விவசாயி. இவர் தனது சொந்தமான 57 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு மனு செய்திருந்தார். இது சம்பந்தமாக பினாயூர் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்று இருந்தார். அங்கு அரும்புலியூரில் பணியாற்றி வந்த வி.ஏ.ஓ. மாரியப்பன் (52) பொறுப்பு வி.ஏ.ஓ. வாக இருந்தார். அவரிடம் பட்டா மாற்றுவது சம்பந்தமாக குமார் பேசியதாக கூறப்படுகிறது. பட்டா மாற்றுவதற்கு குமாரிடம் மாரியப்பன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுத்து பட்டா மாற்றுவதை விரும்பாத குமார் இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனிடம் புகார் அளித்தார்.
கைது
நேற்று குமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அளித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் இதை லஞ்ச பணமாக வி.ஏ.ஓ.விடம் கொடுக்கும்படி கூறி மறைந்திருந்தனர். குமார், வி.ஏ.ஓ. மாரியப்பனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து பட்டா மாற்றம் செய்ய கூறினார். அப்போது அருகில் இருந்த தலையாரி கவியரசன் (45) அந்த பணத்தை பெற்றுக் கொண்டார். மறைந்திருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா உடனடியாக விரைந்து வந்து மாரியப்பன், கவியரசன் இருவரையும் கையும் களவுமாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.