செங்கல்பட்டு
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலி: மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு - போலீஸ் பாதுகாப்பு
|வன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலியாக மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்து. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 34), இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் நகராட்சி அருகே ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடிக்கும் போது 5 பேர் கொண்ட கும்பல் டீ கடைக்குள் நுழைந்து காளிதாசை சரமரியாக வீச்சரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே காளிதாஸ் உயிரிழந்தார்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை வெட்டிவிட்டு தப்பிச்சென்ற ஒருவரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று முன்தினம் மறைமலைநகர் பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல நேற்றும் 2-வது நாளாக மறைமலைநகர் மற்றும் காட்டூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியதால் பிரேத பரிசோதனைக்கு பிறகு காளிதாஸ் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காளிதாஸ் உடலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானவர் அஞ்சலி செலுத்தினர். இதனால் தொடர்ந்து காட்டூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
இதனை தொடர்ந்து காட்டூர் மற்றும் மறைமலைநகர் பகுதியை சுற்றி தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை துணை கமிஷனர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ரோந்து வாகனங்களில் போலீசார் மறைமலைநகர் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே காளிதாஸ் வீட்டின் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் மற்றும் போலீசாரிடம் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் காளிதாசை கொலை செய்தவர்கள் மற்றும் கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவரையும் கைது செய்யக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்திடம் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
விரைவில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அமைதி அடைந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு காளிதாஸ் உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ்குமார், பாலாஜி, சபரி என்கிற சபரிநாதன், வெங்கடேசன் ஆகியோரை 3 தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.