< Back
மாநில செய்திகள்
வந்தே பாரத் ரெயிலில் சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
திருச்சி
மாநில செய்திகள்

வந்தே பாரத் ரெயிலில் சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

தினத்தந்தி
|
24 Sept 2023 1:36 AM IST

வந்தே பாரத் ரெயிலில் சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

முன்பதிவு

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.

இதற்கான கட்டணம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முக்கிய நாட்களுக்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவாகி விற்றுத்தீர்ந்தன. பின்னர் செய்யப்பட்ட பதிவுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாறின.

டிக்கெட் கட்டணம்

அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.1,610 ஆகவும், முதல் வகுப்பு ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.3,005 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.1,665 ஆகவும், எக்ஸ்கியூட்டிவ் ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.3,055 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. (திருச்சிக்கு உரிய கட்டணம் அட்டவணையில் உள்ளது).

8 ஏசி வசதி பெட்டிகள் கொண்ட ரெயிலில் எக்ஸ்கியூட்டிவ் பெட்டி ஒன்று, 7 சேர் கார் இருக்கைகள் கொண்ட பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. சேர் கார் பெட்டி ஒவ்வொன்றிலும் 78 இருக்கைகள், எக்ஸ்கியூட்டிவ் பெட்டியில் 52 என மொத்தம் 535 இருக்கைகள் உள்ளன.

சிறப்பு ரெயில் மாலை வருகிறது

பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள், 2 எல்.இ.டி. டி.வி.க்கள், முதலுதவி ெபட்டி, அனைத்து சீட்டிலும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளன. நவீன கழிப்பறை, பயணிகள் புகைப்பிடித்தால் உடனடியாக எச்சரிக்கும் கருவி, கையால் தொட்டால் மின் விளக்கு எரிதல், திறக்கும் டிஜிட்டல் கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று பிரதமர் தொடங்கி வைக்கும் ரெயில் சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இன்று மதியம் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் சென்னையை இரவு 10.25 மணிக்கு சென்றடைகிறது. இன்று மட்டும் வழியில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய நிறுத்தங்களில் நின்று திருச்சிக்கு மாலை 5.20 மணிக்கு வருகிறது.

செவ்வாய்க்கிழமை இயங்காது

பின்னர் திருச்சியில் இருந்து 5.25 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று சென்னையை சென்றடைகிறது.

நாளை (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.40 மணிக்கு நெல்லையை அடைகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இந்த ரெயில் இயங்காது. மறுநாள் புதன்கிழமை முதல் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்படும். இந்த ரெயில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை இயங்காது என்று திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்