< Back
மாநில செய்திகள்
வந்தே பாரத் ரெயில் பயணிகளின் புகார்கள் மீது கூடுதல் கவனம் -தெற்கு ரெயில்வே தகவல்
மாநில செய்திகள்

வந்தே பாரத் ரெயில் பயணிகளின் புகார்கள் மீது கூடுதல் கவனம் -தெற்கு ரெயில்வே தகவல்

தினத்தந்தி
|
9 Nov 2023 11:56 PM GMT

நடப்பாண்டில் தெற்கு ரெயில்வேயில் 80 ஆயிரத்து 902 பயணிகளின் புகார்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரெயில் பயணிகளின் புகார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் பயணிகளின் பாதுகாப்பிற்கும், சிறப்பான பயணத்தை மேற்கொள்ளவும் ரெயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பயணிகள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் ரெயில்வே துறை சார்பில் ரெயில் மதாத் என்னும் திட்டம் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, 139 என்ற உதவி எண் மூலம் பயணிகள் இந்த சேவையை பெறமுடியும்.

புகார்கள்

இணையதளம், எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் ரெயில் மதாத்தின் 139 என்ற உதவி எண் மூலம் ரெயில் பயணிகள் புகார் மற்றும் குறைகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தெற்கு ரெயில்வேயில் 51 சதவீதம் புகார்கள் ரெயில் மதாத்தின் 139 என்ற உதவி எண் மூலமாகவே பெறப்படுகிறது. இதேபோல, 25 சதவீதம் புகார்கள் இணையதளம் வாயிலாகவும், 4.5 சதவீதம் சமூக ஊடகம் மூலமாகவும், 19 சதவீதம் புகார்கள் ரெயில் மதாத் செயலி மூலமாகவும் பெறப்பட்டு வருகிறது.

இதேபோல, நடப்பாண்டில் 80 ஆயிரத்து 915 புகார்கள் பெறப்பட்டது. அதில், 80 ஆயிரத்து 902 புகார்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை புகார் அளித்து 36 நிமிடத்தில் அந்த புகார்களுக்கு தீர்வு காணப்படுகிறது. மேலும், வந்தே பாரத் ரெயில் பயணிகளின் குறைகளை தினமும் கண்டறிந்து உடனடியாக தீர்ப்பதில் ரெயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்