சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் - தெற்கு ரெயில்வே தகவல்
|சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை,
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.
இந்த நிலையில், சென்னை - கோவை இடையில் இன்று தொடங்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் 5 மணி 50 நிமிடத்தில் சென்னையில் இருந்து கோவை சென்றடைய முடியும். இதேபோல, சென்னை - பெங்களூர் வரையிலான சதாப்தி ரெயிலினின் வேகத்தையும் ஜீன் மாதம் முதல் அதிகரிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
இதேபோல, இந்த வருடத்தில் 44 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த மாதம் சென்னை - ரேணிகுண்டா வழித்தடத்திலும், அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்திலும் ரெயிலின் இயக்க வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது ரெயிலின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயணிகளின் ஒட்டுமொத்த போக்குவரத்து நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.