< Back
மாநில செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் உயருகிறது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் உயருகிறது

தினத்தந்தி
|
19 July 2023 3:47 PM IST

விலங்குகளின் பராமரிப்புக்காக இன்னும் ஓரிரு நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் உயருகிறது.

சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை 1985-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இயற்கை சூழலில் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா ஆசியாவிலேயே மிக பெரியதாகும்.

இங்கு 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. பூங்காவுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகள் பராமரிப்பு செலவுகள், பூங்கா பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பூங்காவில் செய்வதற்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் பூங்கா தொடங்கப்பட்டு கடந்த 38 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் பூங்காவின் நுழைவு கட்டணங்கள், பேட்டரி வாகன கட்டணங்கள் போன்றவற்றை அரசு உயர்த்தி உள்ளது.

அப்படி உயர்த்திய போதும் ஏழை, எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் சுற்றி பார்க்கும் சுற்றுலாத்தலமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விளங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50-ம், பேட்டரி வாகனத்தில் சென்று பூங்காவை சுற்றி பார்க்க பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, லயன் சபாரி மற்றும் மான் சபாரியை சிறப்பு வாகனத்தில் சென்று பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.60 வசூல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டணம் ரூ.200-ஆக உயர்த்துவதற்கும், இதே போல பூங்காவை சுற்றி பார்க்கும் பேட்டரி வாகனம், லயன் சபாரி மற்றும் மான் சபாரி சென்று பார்க்கும் வாகன கட்டணங்கள், கேமரா மற்றும் வீடியோ, கொண்டு செல்வதற்கான கட்டணங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம், அவர்கள் கொண்டுவரும் கேமரா, வீடியோ கட்டணங்கள் உள்பட அனைத்து கட்டணங்களும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு உயர்த்தி அரசாணையை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

பூங்கா கட்டணங்கள் கடந்து வந்த பாதை

1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.10 மட்டுமே வசூல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டு பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறுவர்களுக்கு கட்டணம் ரூ.20- ஆக உயர்ந்தது.

இதனையடுத்து 2019-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ.75, சிறுவர்களுக்கு ரூ.35- ஆக உயர்த்தப்பட்டது. கொரோனா தொற்று பரவலை காரணமாக காட்டி 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.90 -ஆகவும், 5 முதல் 12 வயதுக்குள் உள்ள சிறுவர்களுக்கு ரூ.50 கட்டணத்தை பூங்கா நிர்வாகம் உயர்த்தி தற்போது வரை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்