பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி...இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வானதி சீனிவாசன்....!
|ஆசிய கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சென்னை,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும்.
இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது ,
இந்திய அணிக்கு வாழ்த்துகள். நன்றாக விளையாடினீர்கள். பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் வெற்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.