< Back
மாநில செய்திகள்
சாலையில் வேன் கவிழ்ந்து பெண் பலி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சாலையில் வேன் கவிழ்ந்து பெண் பலி

தினத்தந்தி
|
2 Oct 2023 12:30 AM IST

கோவில்பட்டியில் சாலையில் வேன் கவிழ்ந்து பெண் பலியானார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கோவில்பட்டி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துரைசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 சிறுவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டனர்.

வேனை சிவகாசி வடக்குத்தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 32) என்பவர் ஓட்டினார்.

வேன் கவிழ்ந்தது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேன் சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெண் பலி

இந்த விபத்தில் துரைசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் (58) என்ற பெண் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும், கிழக்கு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்களும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் சாலையின் நடுவே கவிழ்ந்த வேன் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்