ராமநாதபுரம்
பரமக்குடி அருகே வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்;ஆடு வியாபாரிகள் 2 பேர் பலி
|வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ஆடு வியாபாரிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பரமக்குடி,
வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ஆடு வியாபாரிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஆடு வியாபாரிகள்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர், ரவி. இவருடைய மகன் ரஞ்சித் (வயது 27).
கார்மேகம் என்பவருடைய மகன் செல்வம்(36). இருவரும் ஆடு வியாபாரிகள்.
நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் லெட்சுமிபுரத்தில் இருந்து பரமக்குடி வழியாக சத்திரக்குடி அருகே உள்ள போகலூர் கிராமத்திற்கு ஆடு வாங்க சென்றனர்.
இதே போல் திருப்பூரை சேர்ந்த சிலர், ராமேசுவரத்திற்கு சென்று திதி கொடுத்துவிட்டு வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அரியனேந்தல் சிட்கோ அருகே வந்தபோது அந்த வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ரஞ்சித், செல்வம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
2 பேர் பலி
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். பலியான இருவரது உடல்களையும் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதனும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருப்பூரை சேர்ந்த சம்பந்தம்(36) என்பவரை கைது செய்தனர்.