கன்னியாகுமரி
தக்கலை அருகேஸ்கூட்டர் மீது வேன் மோதி பெண் பலி
|தக்கலை அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதி 2 குழந்தைகள் கண் எதிரே பெண் பரிதாபமாக இறந்தார்.
தக்கலை:
தக்கலை அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதி 2 குழந்தைகள் கண் எதிரே பெண் பரிதாபமாக இறந்தார்.
சுற்றுலா வேன் மோதியது
தக்கலை அருகே உள்ள முளகுமூடு ஒழக்கரிபொற்றை விளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37), வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெபா (35). இவர்களுக்கு ஜெர்சன் (13), ஜெர்சி ரியோனா (7) என 2 குழந்தைகள் உள்ளனர்.
ஜெபா நேற்று தனது குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சுவாமியார்மடத்தில் உள்ள கணவரின் தாயார் வீட்டுக்கு சென்றார். பின்னர் மதியம் 12 மணியளவில் மீண்டும் குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
காட்டாத்துறையில் வந்த போது எதிரே சிவகாசியில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்ட சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராமல் வேன், ஸ்கூட்டர் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் ஜெபாவும், இரண்டு குழந்தைகளும் கீழே விழுந்தனர். அவர்களில் ஜெபாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலே ஜெபா பரிதாபமாக இறந்தார். குழந்தைகள் இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து ஜெபாவின் கணவர் சுரேஷ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்தார். அந்த புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்திய சிவகாசியை சேர்ந்த வேன் டிரைவர் சோலைராஜன் (32) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகள் கண்முன்னே தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.