தேனி
வேன் டிரைவரிடம் கத்தி முனையில் ரூ.1¼ லட்சம் கொள்ளை
|பெரியகுளம் அருகே வேன் டிரைவரிடம் கத்தி முனையில் ரூ.1¼ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வேன் டிரைவர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள டி.குளத்துப்பட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 33). வேன் டிரைவர். இவர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செழியன் என்பவருக்கு சொந்தமான வேனை ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு வீரப்பன் வேனை ஓட்டி சென்றார். வேனில் கிளீனராக ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கவுதம் உடன் இருந்தார்.
பின்னர் கேரளாவில் காய்கறியை இறக்கி விட்டு, ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 980-ஐ பெற்றுக் கொண்டு ஒட்டன்சத்திரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளம் அருகே தேனி-திண்டுக்கல் பைபாஸ் சாலை ஓரத்தில் வேனை நிறுத்தி வீரப்பன் சிறுநீர் கழித்தார்.
பணம் கொள்ளை
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வீரப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.300 பறித்துக் கொண்டனர். பின்னர் வேனில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 980-யையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் வீரப்பன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கொள்ளையடித்து சென்ற 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.