பெரம்பலூர்
டிராக்டர் மீது வேன் மோதல்; 4 அய்யப்ப பக்தர்கள் படுகாயம்
|டிராக்டர் மீது வேன் மோதிக்கொண்டதில் 4 அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
மங்களமேடு:
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு வேனில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதியது. இதில் வேனின் முன்பக்கம் உருக்குலைந்தது. டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய அய்யப்ப பக்தர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், மங்களமேடு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் போலீசார் விபத்தில் சிக்கிய வேனையும், டிராக்டரையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.