சென்னை
எண்ணூர் விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி மீது வேன் மோதல்; தொழிலாளி பலி - 9 பேர் படுகாயம்
|எண்ணூர் விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல்.என்.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 9 பேர், வேனில் சென்னை துறைமுகம் 5-வது நுழைவுவாயில் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
அந்த வேன், திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில் கே.வி.கே.குப்பம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காட்டன் ரோடு பகுதியைச் சேர்ந்த எரோலின் ஸ்டீபன் (வயது 35) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் வேனில் இருந்த டிரைவர் சந்துரு, வெங்கட், சுமன், டில்லி, பிரபு, முத்து உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியான எரோலின் ஸ்டீபனின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.