கன்னியாகுமரி
மீன்பிடிக்க சென்ற வள்ளம், விசைப்படகு மீனவர்கள்
|குளச்சல் கடல் பகுதியில் வீசிய சூறைக்காற்று தணிந்ததால் நேற்று வள்ளம், விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.
குளச்சல்,
குளச்சல் கடல் பகுதியில் வீசிய சூறைக்காற்று தணிந்ததால் நேற்று வள்ளம், விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.
சூறைக்காற்று
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் புறப்பட்டு ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம்.
வள்ளம் மீனவர்கள் காலையில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித்து விட்டு மதியம் திரும்புவார்கள்.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வந்தது.
பாதியில் கரை திரும்பினர்...
இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளும் பாதியிலேயே கரைக்கு திரும்பின. வள்ளம் மீனவர்கள் மட்டும் வழக்கம்போல் மீன்பிடித்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று காரணமாக பெரும்பாலான வள்ளம், கட்டுமர மீனவர்களும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடலுக்கு சென்ற ஒரு சில வள்ளங்களில் குறைவான மீன்களே கிடைத்தன. இதனால் கடந்த 3 நாட்களாக குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உற்சாகத்துடன் சென்றனர்
இந்தநிலையில் நேற்று காலை முதல் குளச்சல் கடல் பகுதியில் வீசி வந்த சூறைக்காற்று சற்று தணிந்து காணப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தொழிலுக்கு செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று காலையில் உற்சாகத்துடன் மீன் பிடிக்கச் சென்றனர்.
இதேபோல் வள்ளம், கட்டுமர மீனவர்களும் வழக்கம்போல் மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் அவற்றில் குறைவான மீன்களே கிடைத்தன.