< Back
மாநில செய்திகள்
வள்ளலார் முப்பெரும் விழா: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வள்ளலார் முப்பெரும் விழா: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

தினத்தந்தி
|
19 Jun 2023 12:00 AM IST

வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் கற்பகம் பரிசுகளை வழங்கினார்.

வள்ளல் பெருமான் பிறந்து 200-வது ஆண்டு தொடக்கம், தருமசாலை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டு தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா தமிழக அரசின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதையொட்டி அருட்பெருஞ்ஜோதி ஞான தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. பின்னர் திருவருட்பா இன்னிசையமுது நிகழ்ச்சியை தொடர்ந்து, வள்ளலார் அருள்நெறி பரப்புரை ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து நடந்த விழாவுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், வள்ளலாரின் முக்கிய கொள்கையான அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பேணுதல், மது அருந்தாமல் இருத்தல் மற்றும் புலால் உணவை மறுத்தல் ஆகியவற்றை பின்பற்றுவது நாம் அவருக்கு செய்யும் நன்றியாக இருக்கும், என்றார். பின்னர் கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் சன்மார்கள் சான்றோர்களுக்கு விருது வழங்கி, வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

அதனை தொடர்ந்து சமரச சுத்த சன்மார்க்க கருத்தரங்கமும், திருவருட்பா இன்னிசையமுது, ஞானப்பொழிவரங்கம், திருவருட்பா கிராமிய இசை, திருவருட்பா பல்சுவை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. முடிவில் ஜோதி வழிபாடு நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி இணை ஆணையர் பிரகாஷ், பெரம்பலூர் உதவி ஆணையர் லெட்சுமணன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், சமரச சன்மார்க்க சங்க மாவட்ட தலைவர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்