< Back
மாநில செய்திகள்
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் மே 10-ம் தேதி வரை நிறுத்தம்
மாநில செய்திகள்

வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் மே 10-ம் தேதி வரை நிறுத்தம்

தினத்தந்தி
|
30 April 2024 5:41 PM IST

தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கி சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.

இதற்கிடையே, சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறாக சர்வதேச மையத்தை அமைக்கக்கூடாது என்றும், வேறு இடத்தில் கட்டடம் கட்டவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கட்டிடம் கட்ட ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 106 ஏக்கர் பெருவெளி நிலம் வள்ளலாருக்கு சொந்தமானது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பகுதியில் எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது. தொல்லியல்துறை நிபுணர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இதற்கு விளக்கம் அளித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், வள்ளலார் சர்வதேச மையம், பிரதான கோவிலுக்கு அருகில் அமையவில்லை. பெருவெளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளது. இந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானதாகவே இருக்கும். தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும் வரை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படாது என தெரிவித்தார்.

அப்போது, தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யும் வரை கட்டுமான பணிகளை ஏன் நிறுத்திவைக்கக்கூடாது என நீதிபதி கேள்வியெழுப்பினார். இதற்கு, கட்டுமான பணிகளை மே 10-ம் தேதி வரை நிறுத்திவைக்க அறிவுறுத்துவதாக தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார். இதையடுத்து இந்த வழக்கு மே 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்