மதுரை
வைகுண்ட ஏகாதசி விழா: பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|வைகுண்ட ஏகாதசியையொட்டி மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி மதுரையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தல்லாகுளம் பெருமாள் கோவில்
மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. அந்த விழாவில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடைபெற்றது. நேற்று காலை 6.25 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட சொர்க்கவாசலில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் சுவாமி கோவிலில் இருந்து சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, நாராயணா என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிகாலை பனி பொழிவை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் அங்கு கூடியிருந்தனர். மேலும் பகல் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியேறினர். நேற்று முதல் வருகிற 11-ந்தேதி வரை 10 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். எனவே அந்த நேரத்தில் பக்தர்கள் அந்த வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடலழகர் பெருமாள் கோவில்
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் கூடலழகர் பெருமாள் கோவிலில் இரவு 7 மணிக்கு மேல் தான் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அதன்படி சொர்க்கவாசல் திறப்பு இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. அப்போது பரமபத வாசல் வழியாக வியூகசுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் வியூக சுந்தரராஜ பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தார்.
அப்போது பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும் வடம்போக்கி தெரு மற்றும் கோவிலின் உள்ளே, வெளியேயும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ராப்பத்து உற்சவம் கோவில் முன்புறம் உள்ள திருஅத்யயன மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று முதல் 11-ந் தேதி வரை இரவு 7 மணி முதல் 9 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.
திருமோகூர் கோவில்
இதே போன்று திருமோகூர் காளமேகபெருமாள் கோவிலும் நேற்று இரவு 7.25 சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அப்போது திருமோகூர் காளமேகபெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வெங்கடாசல பெருமாள்
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமங்கலம் வெங்கடாசல பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு சுற்றுவட்டார பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4.50 மணிக்கு சர்வ அலங்காரத்தில் வெங்கடாசல பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்தார். அப்போது பக்தி பரவசத்துடன் ஓம் நமோ நாராயணா என கோஷமிட்டனர்.
இதே போல திருமங்கலம் அருகே சிந்துபட்டி கிராமத்தில் உள்ள தென் திருப்பதி என அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு அதிகாலை 7.10 மணிக்கு நடைபெற்றது. சொர்க்கவாசல் வழியாக வெங்கடாஜலபதி சென்றார்.தொடர்ந்து அவரை நம்மாழ்வார் வரவேற்று கோவிலை சுற்றி வந்து யாக சாலையில் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஜெனகநாராயண பெருமாள்
சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகநாராயண பெருமாள் சர்வஅலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலை வலம் வந்து மண்டபத்திற்குள் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குருவித்துறை சித்திரதவல்லப பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் சிலை திருடு போய் விட்டதால் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. திருடு போன சிலைகளை விரைந்து கண்டுபிடித்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தசாவதார நிகழ்ச்சி
திருப்பரங்குன்றம் தியாகராஜர்காலனியில் உள்ள ஸ்ரீ சக்திமாரியம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருப்பரங்குன்றம் கூடல்மலையில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோவிலில் வெங்கடாஜலபதி பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தசாவதார நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாஜலபதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டப்பட்டி, லெக்கடிபட்டி, அம்மன்கோவில்பட்டி, குருவார்பட்டி, வெள்ளிமலை, தொந்திலிங்கபுரம், முடுக்கன்காடு ஆகிய 7 கிராமங்களுக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவிலில் லெக்கடிபட்டியில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனால் பக்தர்கள் எவ்வித சிரமமின்றி சாமி தரிசனம் செய்தனர்.