மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ
|அடுத்த 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தோள்பட்டை எலும்பு முறிவுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குணமடைந்து வருகிறார்.
மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பின் வைகோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று மாலை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அவருடைய உடல்நலனில் முன்னேற்றம் தென்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, அவர் அடுத்த 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 10 நாட்களுக்கு நிர்வாகிகள் யாரும் வைகோவை நேரில் சந்திக்க வர வேண்டாம் என ம.தி.மு.க. தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.