< Back
மாநில செய்திகள்
வைகாசி அமாவாசை: சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
மாநில செய்திகள்

வைகாசி அமாவாசை: சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
31 May 2022 12:27 AM IST

சதுரகிரி கோவிலில் அமாவாசையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்ததால் வனத்துறை கேட் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சிறப்பு அலங்காரம் அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பக்தர்களின் வசதிக்காக மதுரை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், போலீசார் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்