கடலூர்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
|கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், தற்போது இந்த ஆண்டு வைகாசி பெருவிழா நடக்கிறது.
இதையொட்டி வண்ணார மாரியம்மன், பிடாரி அம்மன் எல்லை கட்டுதல், அமர்ந்தவாழியம்மன் உற்சவம், பிடாரி அம்மன் உற்சவம் வீதி உலா, விக்னேஸ்வர பூஜை, வெள்ளி, மூஷிக வாகனத்தில் புற்று மண் எடுத்தல், சாமி வீதி உலா நடந்தது.
கொடியேற்று விழா
நேற்று காலை கொடியேற்று விழா நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறந்து பள்ளி அறை பூஜை, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை, சோமாஸ்கந்தர் சன்னதியில் யாத்ரா தானம், ஊஞ்சல் சேவை நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் கொடி மரத்துக்கு அருகில் வந்ததும், வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு கூடி நின்ற திரளான பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்தது.
தேரோட்டம்
இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு சூரிய பிரபை, சந்திரபிரபை வாகனங்களில் வீதி உலா, சிம்ம வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் ராஜ வீதி உலா, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) கோபுர தரிசனம், திருக்கல்யாணம், 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிச்சாண்டவர் வீதி உலா, 13-ந்தேதி (திங்கட்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
இதில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் எழுந்தருளுவார்கள். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அப்போது தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் அசைந்தாடி வரும் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு மனமுறுகி வேண்டுவர். தேர் நிலையை வந்தடைந்ததும், மண்டகப்படி நடக்கும்,
மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடராஜர் தரிசனம், நடராஜர் திருக்கல்யாணம், இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் ராஜ வீதி உலா நடக்கிறது.