வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி அழைப்பு
|வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
கேரள அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் 603 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க வேண்டும் என்று, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தை கேரள மந்திரி சாஜி செரியன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வழங்கினார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். இங்குள்ள பிரசித்திப்பெற்ற மகாதேவர் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இக்கொடுமைகளுக்கு எதிராக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் டி.கெ.மாதவன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே.பி.கேசவ மேனோன் போன்றோர் முன்னின்று செயல்பட்டனர். காந்தி இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், பெரியார் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதும் வரலாற்று சிறப்புமிக்கது ஆகும்.
இதன்காரணமாக, பெரியார் வைக்கம் வீரர் என அறியப்பட்டதும், வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அமைதியான முறையில் 603 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23-ந்தேதி வெற்றிகரமாக முடிவுற்றது.
வரலாற்று சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
வைக்கம் போராட்ட வெற்றிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால், கேரள முதல்-மந்திரி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இணைந்து வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தி, வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி, நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்பித்திட வேண்டும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அந்த விழாவில் பங்கேற்க தனது இசைவினை தெரிவித்துள்ளார்.