< Back
மாநில செய்திகள்
வைகை அணை நீர்மட்டம் 58 அடியாக உயர்வு
தேனி
மாநில செய்திகள்

வைகை அணை நீர்மட்டம் 58 அடியாக உயர்வு

தினத்தந்தி
|
21 Oct 2023 3:15 AM IST

வைகை அணைக்கு கடந்த 5 நாட்களில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 58 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகர குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. அணையின் மொத்த உயரம் 71 அடி ஆகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழே சரிந்து காணப்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் முதல்போக பாசனத்திற்கான தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1,300 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

கிடு, கிடுவென உயர்வு

கடந்த 15-ந் தேதி 53 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து நேற்று 58.14 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 1,445 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்