தேனி
வறண்டு போன வைகை ஆறு
|தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் நீர்வரத்து இல்லாமல் வைகை ஆறு வறண்டு போனதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது.
குடிநீர் வினியோகம்
ஆண்டிப்பட்டி பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஆற்றில் உறைக்கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.
இவையில்லாமல் குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தேனி கலெக்டர் அலுவலகம், அல்லிநகரம் நகராட்சி பகுதிகள் மற்றும் வள்ளல் நதி பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வறண்ட வைகை ஆறு
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்தில் இதுவரை பெய்யவில்லை. இதனால் தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் வைகை ஆறு நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட உறைகிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது. ஆற்றில் இருந்த மணல் அனைத்தும் அள்ளப்பட்டு விட்டதால், உறை கிணற்றில் நீர்சுரப்பது குறைந்துவிட்டது.
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
இதன்காரணமாக குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் இனிவரும் நாட்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.