< Back
மாநில செய்திகள்
பருவமழை பொய்த்ததால் பாதியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
தேனி
மாநில செய்திகள்

பருவமழை பொய்த்ததால் பாதியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்

தினத்தந்தி
|
10 Jan 2023 9:58 PM IST

பருவமழை பொய்த்ததால், வைகை அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்தது. கடந்த ஆண்டை விட தண்ணீர் இருப்பு சரிந்தது.

வைகை அணை

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர், பாசன ஆதாரமாக வைகை அணை திகழ்கிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்தேக்க பரப்பளவு 10 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டும் போது, 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர்ந்து மழை பெய்ததால், கடந்த 2 ஆண்டுகளாக வைகை அணை தனது முழுக்கொள்ளளவிலேயே நீடித்தது.

ஆனால் இந்த ஆண்டில், வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக அணையின் நீர்மட்டம் உயரவில்லை.

அதேநேரத்தில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது.

நீர் இருப்பு குறைவு

நிரம்பி வழிய வேண்டிய நேரத்தில், பருவமழை கைகொடுக்காததால் வைகை அணை நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.60 அடியாக இருந்தது. ஆனால் தற்போது 51.80 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சுமார் 18 அடி தண்ணீர் குறைவாக உள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு வைகை அணையின் நீர் இருப்பு 5 ஆயிரத்து 781 மில்லியன் கனஅடியாக இருந்தது. தற்போது 2 ஆயிரத்து 236 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது, மொத்த தண்ணீர் இருப்பின் 40 சதவீதம் ஆகும். வைகை அணையில் ஏற்கனவே 15 அடி வரை வண்டல் மண் தேங்கியுள்ளது. இந்தநிலையில் அணையின் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால், 5 மாவட்ட விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்